தமிழ்

gov

கோட்டே இராஜதானியின் ஆரம்பம்

இலங்கை இராஜதானிகள் பட்டியலில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேக்கு தனித்துவமான ஓர் இடம் உரித்தாகின்றது. மதம், கல்வி, அரசியல், கலாசாரம் மற்றும் சமூகம் போன்ற துறைகளில் தனித்துவமான பல மாற்றங்கள் நிகழ்ந்த இராஜதானியாகவும் கோட்டே முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியமாக சிங்கள இலக்கியத்தின் பொற்காலம் என வர்ணிக்கப்படுவதும் கோட்டே யுகமாகும்.

கோட்டே இராஜதானியின் ஆரம்பம் பதினான்காம் நூற்றாண்டு எனக் குறிப்பிடப்படுகின்றது. அக்காலத்திலிருந்த கம்பளை அரசாட்சியில் அதிகார புரட்சியை ஏற்படுத்தி பேராதெனி பிரதேசத்தை ஆட்சிசெய்த மூன்றாம் விக்கிரமபாகு ஐந்தாம் பராக்கிரமபாகு மன்னனை பதவியிலிருந்து வெளியேற்றி சிம்மாசனத்தைக் கைப்பற்றிக்கொண்டான். மூன்றாம் விக்கிரமபாகு மன்னராக முடிசூடியதை அடுத்து அதுவரை கம்பளையை மையமாகக் கொண்டு ஆட்சிசெய்த நாலாம் புவனேகபாகு மன்னரினதும் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட ஐந்தாம் பராக்கிரமபாகு மன்னரினதும் அமைச்சராக செயலாற்றிய சேனாதிலங்கார செனவிரத் என்பவரை அப்பதவியிலிருந்து அகற்றி அப்பதவிக்கு றைகம் பிரதேச ஆட்சியாளராகவிருந்த பிரபுராஜ என்ற பெயரில் அழைக்கப்பட்ட நிஸ்ஸங்க அழகக்கோணார எனும் நிஸ்ஸங்க அழகேஸ்வர நியமிக்கப்பட்டார்.

கோட்டே இராஜதானியை ஆரம்பித்து அதை ஸ்ரீ ஜயவர்தனபுர என்ற பெயரில் அழைத்தது நிஸ்ஸங்க அழகேஸ்வரனே. றைகம் பிரதேச ஆட்சியாளராகவும் பலம்வாய்ந்தவராகவிருந்தவர் அழகேஸ்வர என்ற மாபெரும் செல்வந்தரே. அவர் வணிக் வம்சத்தை (வணிகர் குலத்தை) சேர்ந்தவர். செல்வத்தில் குபேரனாகவிருந்த அவருடைய அடுத்த எதிர்பார்ப்பு அதிகாரம் கொண்டவராக இருப்பதாகும். அதற்காக அவர் பின்பற்றிய செயல்முறை யாதெனில், அரச அதிகாரமுள்ள குடும்பங்களில் விவாக சம்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளுவதாகும். அதன் பிரகாரம் அழகேஸ்வரன் 3ஆம் விக்கிரமபாகு மன்னனின் சகோதரியை தமது மனைவியாக்கிக்கொண்டார்.

அக்காலத்தில் இலங்கையின் வடக்கில் அதாவது யாழ்ப்பாண குடாநாட்டில் ஆட்சியதிகாரம் கொண்டிருந்தவர் ஆர்யசக்ரவர்த்தி என்ற தமிழராகும். அவர் வடக்கில் மாத்திரமன்றி கொழும்பு, சிலாபம், நீர்கொழும்பு, பாணதுற போன்ற படகுதுறைகளின் அதிகாரத்தையும் தன்வசம் வைத்திருந்தார். அவர் இந்தளவுக்கு அதிகாரம் உள்ளவராக இருப்பதற்கு பெரும்பாலான சிங்கள மன்னர்களின் செயற்பாடுகளும் பெரிதும் உதவியுள்ளது. 5ஆம் பராக்கிரமபாகு மன்னனை பதவியிலிருந்து வெளியேற்றி 3ஆம் விக்கிரமபாகு மன்னன் சிம்மாசனத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கு ஆர்ய சக்ரவர்தியின் உதவியும் அவருடைய ஆளணியும் கிடைத்தது என்பது இங்கு எடுத்துக்காட்டக்கூடிய உதாரணமாகும். அதற்கு நன்றிக்கடனாக மாத்தளை தும்பறை, சிதுறுவான ஆகிய பிரதேசங்களில் வரி அறவிடும் அதிகாரம் ஆர்யசக்ரவர்த்திக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவர் செல்வந்தராகவும் அதிகாரம் மிக்கவராகவும் இருந்தார்.

ஆர்யசக்ரவர்த்தியின் இந்த எழுச்சியைப் பொறுக்காத அழகேஸ்வரன் எப்படியாவது ஆர்யசக்ரவர்த்தியின் அதிகாரத்தை அழிக்கக்கூடிய வழிபற்றி சிந்திக்கத் தொடங்கினான். ஒருநாள் அவன் கம்பளையிலிருந்து தனது சொந்த ஊரான றைகம நோக்கி போய்க்கொண்டிருந்தான். அது களனி ஆற்றுக்கு தெற்கில் மஹதரகம எனும் தாருகம பிரதேசத்தின் ஊடாக சென்றுகொண்டிருந்தான். தாருகம மூன்று பக்கத்திலும் நீர் சூழ்ந்திருந்த கடும் பாதுகாப்புள்ள திசையாகும். அதன் இருபக்கங்களில் கொலொன்னா ஓயவும் ஒரு பக்கம் தியவன்னா ஓயவும் சூழ்ந்திருந்தது. அதைத்தவிர இந்த பிரதேசம் சதுப்புநிலங்களையும் கொண்டிருந்தது. இதன் காரணமாக தாருகமவை அடைவது மிகக் கஷ்டமாக இருந்தது. இந்த இயற்கை அரணை தனது கோட்டையாக்கிக்கொள்ளுவதற்கு அழகேஸ்வரனுக்கு போதுமானதாக இருந்தது. மேலும் தாருகம பொருளாதார மையமாக இருந்த கொழும்பு நகரத்திலிருந்து 06 மைல் தூரத்தில் அமைந்திருந்தது. இந்த நெருக்கம் கொழும்பிலும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டிருந்த ஆர்யசக்ரவர்த்தியின் அதிகாரத்தை பலவீனப்படுத்த அழகேஸ்வரனுக்கு பெரிதும் உதவியது. மேலும் முன்னர் கூறியதைப்போன்று கொழும்பு சிலாபம், நீர்கொழும்பு, பாணதுற ஆகிய படகுதுறைகளுக்கு ஆர்யசக்ரவர்த்தியின் வர்த்தக படகுகள் அடிக்கடி வந்துபோயின. தண்ணீரில் சென்று அவற்றை அழிப்பதற்கு அழகேஸ்வரன் குறி பார்த்துக்கொண்டிருந்தான். இதன்போது தாக்கும் படகுகளை அந்த இடங்களுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தி உடனே அவற்றை திருப்பி அழைப்பித்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கும் வலுவான கடற்படை இருக்க வேண்டும். அதற்கு தாருகமவில் அமைந்திருந்த நீர்சார்ந்த சூழல் அவனுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.

இந்த அனைத்து காரணிகளையும் கவனத்திற்கொண்ட அழகேஸ்வரன் ஆர்யசக்ரவர்த்தியின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்கு ஒரு கோட்டையை அமைத்துக்கொள்ள தாருகம என்றும் கோட்டே என்றும் ஜயவடன பூமி என்றும் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுரவை தேர்ந்தெடுத்தான்.

அழகேஸ்வரனின் வருகையால் ஸ்ரீ ஜயவர்தனபுர இராஜதானியாகியது. அரசியல், சமூகம், கல்வி, இலக்கியம் என்ற வகையில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருந்த ஒரு காலத்தில் நாட்டின் அரசியல் பயணத்தின் தலைவிதியைத் தீர்மானித்த மிக முக்கியம்வாய்ந்த பல சம்பவங்களுக்கு பின்னணியாக அமைந்த இராஜதானியாக இது இருந்தது.